டெல்லியிலிருந்து கோவா நோக்கிச் சென்ற ஆகாசா ஏர் விமானத்தில், கழிப்பறைக்குள் பீடி புகைத்த பயணியொருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், டெல்லியைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவர், விமானப் பயணத்தின்போது கழிப்பறைக்குள் பீடி புகைத்ததுடன், கையில் லைட்டரையும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இது விமானத்தின் பாதுகாப்பிற்கும், சக பயணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததால், விமானம் கோவா சென்றடைந்ததும் அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து உறுதிப்படுத்தியுள்ள ஆகாசா ஏர் நிறுவனம், தங்கள் ஊழியர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, அந்தப் பயணியைக் கோவா விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்துள்ளது.

தற்போது கோவாவின் மோபா விமான நிலைய போலீஸார், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சிவில் விமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.