கேரளா தேர்தல் நெருங்கும் வேளையில், பினராயி விஜயன் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் கே.பி. கணேஷ் குமார் மீதான பாலியல் புகார் அம்மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. அமைச்சரின் இரண்டாவது மனைவி பிந்து மேனன், “கடந்த சனிக்கிழமை அமைச்சரின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் தனது படுக்கையறையில் மற்றொரு பெண்ணுடன் மிக நெருக்கமாக இருந்ததை கையும் களவுமாகப் பார்த்துவிட்டேன்” எனப் பகீர் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். தான் இதைப் புகைப்படம் எடுக்க முயன்றபோது அமைச்சரின் ஓட்டுநர் தன்னைத் தாக்கியதாகவும், போலீசாரை அழைத்தபோது அவர்களை உள்ளே விடாமல் தடுத்து, அந்தப் பெண்ணைத் தப்ப வைத்ததாகவும் பிந்து மேனன் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

​இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமைச்சர் கணேஷ் குமார் கொஞ்சமும் கூச்சமின்றி, “எனக்கு 5,000 காதல் உறவுகள் இருக்கும், அதைப் பற்றி உங்களுக்கு என்ன? காதல் இல்லாதவர்கள் முட்டாள்கள்” என மிகவும் ஏளனமாகப் பதில் அளித்துள்ளது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல அமைந்துள்ளது. ஏற்கனவே முதல் மனைவி யாமினியால் குடும்ப வன்முறைப் புகாரில் சிக்கி விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராட்டங்களை அறிவித்துள்ளதால், கேரள அரசியல் களம் சூடாகி, பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.