கர்நாடக மாநிலம் பெலகாவியில் சமூக வலைதளங்கள் மூலம் பணக்கார ஆண்களைக் கவர்ந்து, ‘ஹனிட்ராப்’ பாணியில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து வந்த 33 வயது ஆடை வடிவமைப்பாளர் தீபா அவதாகி என்பவரைத் திலக்வாடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

பாகல்கோட் மாவட்டம் மகாலிங்பூரைச் சேர்ந்த இவர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் வசதி படைத்த மற்றும் செல்வாக்கு மிக்க ஆண்களைக் குறிவைத்து நட்பு கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில் மிகவும் கண்ணியமாகவும், நம்பிக்கைக்குரியவராகவும் பழகி, சம்பந்தப்பட்ட நபர்களின் முழு நம்பிக்கையைப் பெற்ற பிறகு அவர்களைத் நேரில் சந்திக்கத் திட்டமிடுவார்.

அவர்களின் நம்பிக்கையைச் சாதகமாக்கிக் கொள்ளும் தீபா, அவர்களைத் தனியாகச் சந்திக்க வருமாறு ஏதேனும் ஒரு லாட்ஜ் அல்லது ஹோட்டலுக்கு அழைப்பார். அங்கு சென்றவுடன் மிகவும் எதார்த்தமாகப் பேசிப் பழகும் அவர், ஒரு கட்டத்தில் அந்த நபரை குளியலறைக்குச் சென்று புத்துணர்ச்சி பெற்று வருமாறு கூறுவார்.

அந்த நபர் குளியலறைக்குள் சென்ற அடுத்த சில நிமிடங்களில், அறையில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம், தங்க நகைகள், விலை உயர்ந்த பைகள் மற்றும் கைபேசிகளைச் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி விடுவார். சில தருணங்களில் பாதிக்கப்பட்டவர்களின் சொகுசு கார்களையே திருடிக்கொண்டு அவர் தலைமறைவாகி இருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திலக்வாடி போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தீபா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் இவர் இதுபோன்று பலரைத் திட்டமிட்டு ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு உதவியாக இருந்த கூட்டாளி ஒருவர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களுடன் பழகும்போதும், அவர்களைத் தனியாகச் சந்திக்கச் செல்லும்போதும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் பெலகாவி காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.