அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. தவெகவின் முக்கியப் பொறுப்பாளராகவும், கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள அவர், இதுவரை 8 முறை கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த முறை அவர் தனது சொந்தத் தொகுதியிலேயே போட்டியிடுவாரா அல்லது நீலகிரி போன்ற புதிய தொகுதிகளில் களம் இறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் யாரைக் கை காட்டுகிறாரோ அவர்தான் சட்டமன்ற உறுப்பினர்” என்று கூறி, போட்டியிடும் தொகுதி குறித்த முடிவை விஜய்யிடமே விட்டுவிட்டார். தற்போது அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகளை தவெக பக்கம் இழுப்பது மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை கவனிப்பது போன்ற முக்கியப் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், செங்கோட்டையனின் இந்தப் பதில் தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
