திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில், கடந்த 2021 தேர்தலில் அமைச்சர் ஐ.பெரியசாமி சுமார் 1.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றார். இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில், வரும் 2026 தேர்தலில் நடிகர் விஜய் ஒரு வாக்கு கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனத் தவெகவினர் ஆத்தூர் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இதற்குப் பதிலடியாக, “தவெக வேட்பாளர் டெபாசிட் வாங்கினால் நான் சேலை கட்டிக் கொள்கிறேன்” என திமுக இளைஞரணியினர் சவால் விட்டு போஸ்டர் ஒட்ட, சமூக வலைதளங்களில் “I am waiting” வீடியோக்கள் எனப் போர் மூண்டது.
ஆனால், போஸ்டர் அரசியலுக்குச் சற்றும் எதிர்பார்க்காத ஒரு அதிரடிப் பதிலடியை திமுக களத்தில் கொடுத்துள்ளது. ஆத்தூர் தொகுதியில் தவெகவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைத் தங்கள் பக்கம் இழுத்து திமுகவில் இணைய வைத்துள்ளது. இதன் மூலம், “அரசியல் என்பது வெறும் போஸ்டர்களிலும் சமூக வலைதளங்களிலும் மட்டும் இல்லை; அது மக்களிடமும் நேரடி களப்பணியிலும் தான் இருக்கிறது” என்பதை திமுக நிரூபித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்தத் திடீர் மாற்றம் தவெக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
