உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மாவட்டத்தில் வசிக்கும் 11 வயது சிறுமி ஒருவர் திடீரென கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதித்தபோது, அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது, இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிறுமிக்கு பிரசவம் நடந்து ஒரு குழந்தை பிறந்தாலும், அந்தக் குழந்தை ஒன்றரை மணி நேரத்தில் உயிரிழந்தது. சிறுமியும் அதிக ரத்தக் கசிவால் உடல்நிலை மோசமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவரது உடல்நிலை மெல்ல மெல்ல தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 31 வயதான ராஷித் என்பவர் சிறுமியை பழங்கள் தருவதாக ஆசை காட்டி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அவர், சிறுமியை மிரட்டி, இதைப் பற்றி யாரிடமாவது கூறினால் குடும்பத்தினரைக் கொலை செய்வேன் என்று பயமுறுத்தியுள்ளார். மேலும், இந்தக் குற்றச் செயலை காணொளியாகப் பதிவு செய்து, சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர், இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ராஷித்தை உடனடியாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் சிறுமியின் குடும்பத்தையும், அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.