மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா நகரைச் சேர்ந்தவர் சவிதா குஷ்வாஹா (23). திடீரென மாயமான தனது மகளைக் காணவில்லை என அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சவிதாவைக் கண்டுபிடித்த காவல்துறையினர், அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு தனது பெற்றோரைச் சந்தித்த சவிதா, தான் ஒருவரை மனதாரக் காதலிப்பதாகவும், அவருடனேயே வாழ விரும்புவதாகவும், பெற்றோருடன் வர விருப்பமில்லை என்றும் தீர்க்கமாகக் கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், சவிதா தங்களுக்கு இறந்துவிட்டதாகக் கருதி, சமுதாயத்தில் தங்கள் கௌரவம் பாதிக்கப்பட்டதாக வேதனை அடைந்தனர்.

​இதனையடுத்து, சவிதாவின் குடும்பத்தினர் ஒரு உருவப்பொம்மையைச் செய்து அதற்குப் புதுத்துணி உடுத்தி, மாலை அணிவித்து இறுதிச்சடங்குகளைச் செய்தனர். சவிதாவின் தந்தை மற்றும் சகோதரர்கள் அந்தப் பொம்மையைச் சவப்பெட்டியில் வைத்து, மேள தாளங்கள் முழங்க வீதி வீதியாக ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். மயானத்தில் வைத்து அந்த உருவப்பொம்மையை எரித்துவிட்டு, தங்கள் மகள் தங்களுக்கு இறந்துவிட்டதாக ஊர் முழுவதும் அறிவித்தனர்.

இது குறித்துப் பேசிய சவிதாவின் சகோதரர், “எங்கள் தங்கை சவிதா மீது நாங்கள் மிகுந்த பாசம் வைத்திருந்தோம்; அவள் கேட்ட அனைத்தையும் வாங்கிக் கொடுத்தோம். ஆனால் அவள் வீட்டை விட்டு வெளியேறியது எங்கள் பெற்றோரின் பல ஆண்டுகால வளர்ப்பு மற்றும் கனவுகளைச் சிதைத்துவிட்டது. இது அவளுக்கான இறுதிச்சடங்கு அல்ல, அவள் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையின் இறுதிச்சடங்கு” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.