தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க உத்தரப் பிரதேசம் சென்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 18 சிறுவர், சிறுமியர் (வீரர்கள்), ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகினர்.

10 சிறுவர்கள் மற்றும் 8 சிறுமிகள் அடங்கிய இந்த அணியினர், ரயிலின் பொதுப் பெட்டியில் (General Coach) கழிவறைக்கு அருகிலேயே அமர்ந்து பயணம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

நடுங்கும் குளிரில், முறையான இருக்கை வசதி இன்றித் தங்களது பைகளுடனேயே கழிவறை ஓரத்தில் அவர்கள் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா பள்ளி மற்றும் மக்கள் கல்வித் துறையின் கீழ் இந்தப் போட்டிக்கு அனுப்பப்பட்ட வீரர்களுக்கு, செல்லும் போதும் வரும் போதும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை அதிகாரிகள் எடுத்துத் தரவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. விளையாட்டு வீரர்களை இதுபோன்று ‘மனரீதியாகத் துன்புறுத்திய’ பொறுப்பற்ற அதிகாரிகள் மீது கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.