ஹைதராபாத் மேடிப்பள்ளி பகுதியில், கணவரைத் திட்டமிட்டு கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவியையும், அவரது இரு நண்பர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கிழக்கு பிருந்தாவன் காலனியில் வசித்து வந்த அசோக் என்பவர், கடந்த டிசம்பர் 11-ம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்தார். கழிவறையில் விழுந்து தனது கணவர் இறந்துவிட்டதாக அவரது மனைவி பூர்ணிமா (36) உறவினர்களிடம் கூறி நம்ப வைத்துள்ளார்.

ஆனால், உடற்கூறாய்வின் போது அசோக்கின் கன்னம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதுவே கொலையாளிகளைக் காட்டிக்கொடுக்கும் முக்கியத் தடயமாக மாறியது.

போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், பூர்ணிமாவுக்கும் மகேஷ் (22) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதற்குத் தடையாக இருந்த அசோக்கை தீர்த்துக்கட்ட, மகேஷ் மற்றும் அவரது நண்பர் சாய்குமார் உதவியுடன் பூர்ணிமா திட்டம் தீட்டியுள்ளார்.

சம்பவத்தன்று அலுவலகத்தில் இருந்து திரும்பிய அசோக்கை இந்த மூவர் கும்பலும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அவரது ஆடைகளை மாற்றி, மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கதை கட்டியுள்ளனர். தற்போது பூர்ணிமா உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.