சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையின மக்களின் உண்மையான பாதுகாவலனாக அதிமுக எப்போதும் விளங்கி வருவதாகக் குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறுபான்மையினருக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதை நினைவுகூர்ந்த அவர், அரசியலில் ஒரு சிலரே பரம்பரை பரம்பரையாகப் பதவிகளை அனுபவித்து வருவதாக விமர்சித்தார்.

இயேசுபிரானின் போதனைகள் இக்காலத்திற்கும் பொருந்துவதாகக் கூறிய அவர், தீய சக்திகளிடம் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், ஆட்டுத்தோலைப் போர்த்திய ஓநாய்கள் போல வருபவர்களிடம் சிறுபான்மை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒரு குட்டிக்கதை மூலம் அவர் எச்சரித்தார்.

அத்தகைய தீய சக்திகளிடம் ஏமாந்துவிட்டால் மக்களுக்கு விடியல் என்பதே கிடைக்காது என்று குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபடும் இயக்கம் என்று உறுதியுடன் தெரிவித்தார்.