வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற யாத்திரையின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘மரத்தடி மாமன்றம்’ நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றுப் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக கட்சி பாஜக-வின் பி-டீம் என்ற திமுக-வின் விமர்சனத்திற்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார். “ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதுதான் திமுக-வின் வாடிக்கை; அமைச்சர் சேகர்பாபுவைச் சந்தித்துவிட்டுத்தான் செங்கோட்டையன் தவெக-வுக்குச் சென்றார் என்றால், தவெக திமுக-வின் பி-டீமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், அதிமுக-வைக் காப்பாற்றுமாறு உதயநிதி ஸ்டாலின் பேசியதற்குப் பதிலளித்த அவர், “ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதையாக இது உள்ளது; 1999-இல் பாஜக-வுடன் கூட்டணி வைத்த திமுக, இப்போது விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது” என்று சாடினார். எப்போதும் கூட்டணியை நம்பியே இருக்கும் திமுக, மக்கள் செல்வாக்கோடு தனித்து நின்று வென்றதில்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.