நடிகர் தாடி பாலாஜி தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் சார்லஸ் மார்ட்டின் புதிதாகத் தொடங்கியுள்ள ‘லட்சிய ஜனநாயகக் கட்சியில்’ இணைந்துள்ளார். ஆரம்பத்தில் திமுக ஆதரவாளராக இருந்து, பின்னர் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றுத் தன் நெஞ்சில் அவரது உருவத்தைப் பச்சை குத்திக்கொள்ளும் அளவிற்குத் தீவிரத் தொண்டராகப் பாலாஜி செயல்பட்டார்.
இருப்பினும், தவெக கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், விஜய்யைச் சந்திக்கப் பலமுறை முயற்சி செய்தும் அங்கிருந்த இரண்டாம் கட்ட நிர்வாகிகள் தன்னை அனுமதிக்கவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களுக்கே தன் மகனைப் பார்க்க முடியாத நிலை இருக்கும்போது, தான் எவ்வளவு முயற்சி செய்தும் பலனில்லை என்பதை உணர்ந்து அந்த முயற்சியைக் கைவிட்டதாகப் பாலாஜி கூறியுள்ளார். இந்தச் சூழலில் சார்லஸ் மார்ட்டினைச் சந்தித்தபோது அவர் தன்னை அன்போடு வரவேற்றதாகவும், அந்த மரியாதையே தான் இந்தக் கட்சியில் இணையக் காரணம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனுடனான மோதல் காரணமாகத்தான் இந்தக் கட்சிக்கு மாறினாரா என்ற கேள்விக்கு, தான் ஒருபோதும் ஆதவ் அர்ஜுனை நேரில் சந்தித்ததே இல்லை என்று கூறி அந்தப் புகாரை அவர் மறுத்துள்ளார்.
