ஆன்மீகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்று இடுக்கு பிள்ளையார் கோயில். இக்கோயிலில் உள்ள குறுகலான இடுக்கு வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நீண்டகால நம்பிக்கையாக இருந்து வருகிறது.

​இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிக்குமார் (36) என்ற பக்தர் திருவண்ணாமலைக்குக் கிரிவலம் வந்து, இடுக்கு பிள்ளையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தனது உடல்பருமன் காரணமாக அந்த இடுக்கில் இருந்து வெளியே வர முடியாமல் அவர் உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளார்.

​இடுக்கில் மாட்டிக்கொண்டதால் அவருக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுத் துடிதுடித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பிற பக்தர்கள் உடனடியாக அவரைப் போராடி மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

​எனினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மணிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்த இந்தச் சம்பவம், திருவண்ணாமலைக்கு வந்திருந்த பக்தர்கள் மத்தியிலும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.