கோவை மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான கவுண்டம்பாளையத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

கடந்த மூன்று தேர்தல்களாக அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த இந்தத் தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ-வும் அதிமுக மாவட்டச் செயலாளருமான பி.ஆர்.ஜி. அருண்குமாரையே சுமார் 42,140 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கனிமொழி சாதனை படைத்துள்ளார்.

வழக்கறிஞர், பிசியோதெரபிஸ்ட், தொழிலதிபர் மற்றும் ஜோதிடர் எனப் பன்முக அடையாளங்களைக் கொண்ட கனிமொழிக்கு, இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர்.

கடந்த காலங்களில் அவர் பேசிய சில ஜோதிட ரீதியான கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், மக்கள் அதை ஒரு பொருட்டாகக் கருதாமல், விஜய் முன்வைத்த அரசியல் மாற்றத்திற்குப் பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் மொத்தம் 1,46,466 வாக்குகளைப் பெற்றுள்ள கனிமொழி, முதல் முயற்சியிலேயே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் அருண்குமார் 1,04,326 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், காங்கிரஸ் வேட்பாளர் சூர்யபிரகாஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

4.22 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில், ஒரு புதிய கட்சி இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பது கோவையின் ஒட்டுமொத்த அரசியல் சமன்பாட்டையும் மாற்றியுள்ளது. வெற்றிக்குப் பின் பேசிய கனிமொழி சந்தோஷ், கோவை மக்கள் ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்காகக் காத்திருந்ததாகவும், அந்த நம்பிக்கையைத் தனது தவைவர் விஜய் மூலம் மக்கள் பெற்றுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

குறிப்பாக, தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் பெண்களின் பாதுகாப்புக்கும் தனது பணிகளில் முதலிடம் அளிக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். அதிமுகவின் பலமான வாக்கு வங்கியைச் சரித்து கனிமொழி பெற்றுள்ள இந்த வெற்றி, தவெக-வின் எதிர்கால வளர்ச்சியை கோவை மண்டலத்தில் புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.