தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் அனல் பறந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்கப் போவதாக வெளியான செய்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், விஜய்யின் தவெக 107 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மெஜாரிட்டிக்கு இன்னும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுவதால், பிற கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் பரவின.
இந்நிலையில், “கூட்டணி ஆட்சிக்கு விஜய் அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என சண்முகம் கூறியதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது எக்ஸ் (X) பக்கத்தில் விளக்கமளித்துள்ள சண்முகம், அந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்றும், தான் அப்படி எந்தக் கருத்தையும் ஊடகங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் கொதித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ-க்கள் (கீழ்வேளூர் மற்றும் பத்மநாபபுரம்) உள்ளனர். இவர்களின் ஆதரவு தவெக-விற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில செயலாளரின் இந்த அதிரடி மறுப்பு தவெக முகாமுக்குச் சற்றே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான ‘மேஜிக் நம்பரை’ எட்ட விஜய் அடுத்தகட்டமாக எந்தக் காய்களை நகர்த்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
