தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டபோது, விஜய்யை யாரும் எளிதில் நெருங்க முடியாத சூழல் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு இந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான அவர் ஈரோட்டில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திக் காட்டியதுடன், மற்ற கட்சியினரும் தவெக-வை நோக்கி வர வழிவகை செய்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் ஏற்கனவே இணைந்த நிலையில், தற்போது அக்கட்சியில் புதிய சேர்க்கைகள் அதிகரித்துள்ளன. இன்று விஜய் முன்னிலையில் பிரபல ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்ட், வழக்கறிஞர் சத்யகுமார் மற்றும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகரனின் மகன் அமலன் ஆகியோர் கட்சியில் இணைந்துள்ளனர்.
குறிப்பாக, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து அரசியல்வாதியான ஜேசிடி பிரபாகரின் மகன் தவெக-வில் இணைந்தது அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதிமுகவிலிருந்து இன்னும் பல முக்கியப் புள்ளிகள் விஜய் தலைமையிலான கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
