வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமான தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார்.
கடந்த தேர்தலில் இப்பகுதியில் அதிமுக வலுவாக இருந்த இடங்களைக் கண்டறிந்து, அங்கு இந்த முறை திமுகவே நேரடியாகப் போட்டியிடுவதா அல்லது கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை மாற்றிக் கொடுப்பதா என்பது குறித்து அவர் விரிவான திட்டத்தைத் தயாரித்துள்ளார்.
குறிப்பாக, கடந்த முறை தோல்வியடைந்த தொகுதிகளில் வேட்பாளர் தேர்விலும் தொகுதி ஒதுக்கீட்டிலும் அதிரடி மாற்றங்கள் செய்ய அவர் பரிந்துரை செய்துள்ளார்.
கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நிலவும் அதிருப்தி மற்றும் வெற்றி வாய்ப்புகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு மாற்றுத் தொகுதிகளை ஒதுக்க செந்தில் பாலாஜி முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
உதாரணமாக, கோவை தெற்கு தொகுதியில் பாஜகவை வீழ்த்த திமுகவே நேரடியாகக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது. அதேபோல், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான தொகுதிகளை அடையாளம் கண்டு, வெற்றி வாய்ப்புள்ள இடங்களை மட்டும் ஒதுக்க அவர் பரிந்துரை செய்துள்ளார்.
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் அந்தப் பலத்தை உடைக்க, ஒவ்வொரு தொகுதியிலும் வலுவான வேட்பாளர்களை நிறுத்த செந்தில் பாலாஜி கையில் வைத்துள்ள ‘லிஸ்ட்’ அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், கடந்த கால மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகம் காரணமாக, இந்த முறை கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கனவு பலிக்காது என்றும், 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
