அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் தொடக்கமாக, கடந்த 13ஆம் தேதி, திருச்சியில் தனது பிரசாரத்தை விஜய் ஆரம்பித்தார். தொடர்ந்து டிசம்பர் 20ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திருச்சி மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த த.வெ.க.வின் தேர்தல் பிரசாரத்தின்போது, போலீசார் கடுமையான நிபந்தனைகளை விதித்ததாக கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி கோரியும், மனுக்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதற்கிடையில், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பிலும் ஒரே வழக்கில் தங்களை சேர்க்கக்கோரி மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க.விற்கு அளிக்கப்படும் அனுமதிகளை விட, த.வெ.க.விற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இது சமமற்ற அணுகுமுறை ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மனுக்கள் மீது ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
