தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தது.

மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்காக இன்று சென்னை வருகை தந்தார். அவரை நேரில் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சி கூட்டணியில் இணைவதை உறுதிப்படுத்தினார். அப்போது, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட தாங்கள் போட்டியிட விரும்பும் 18 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை அவர் பியூஷ் கோயலிடம் வழங்கியதாகத் தெரிகிறது.

முன்னதாக எடப்பாடி பழனிசாமியை ‘துரோகி’ என விமர்சித்து வந்த தினகரன், தற்போது கூட்டணி தொடர்பாகப் பேசுகையில், “பழைய விவகாரங்களை விட கட்சியின் நலன் மற்றும் தமிழகத்தின் நலனே முக்கியம். இது ஒரு ‘பங்காளி சண்டை’ போன்றதுதான்; விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வலிமையை பறைசாற்றும் வகையில், வரும் ஜனவரி 23-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (மாமண்டூர்) அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றி பிரசாரத்தைத் தொடங்க உள்ளனர்.

அதிமுக தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், வைத்திலிங்கம் திமுகவிலும், டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக கூட்டணியிலும் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக நடிகர் விஜய்யின் தவெக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.