தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளில் அரங்கேறி வரும் அதிரடி அரசியல் மாற்றங்களால் எம்.எல்.ஏ.க்களின் காலியிடங்கள் 5-ஆக உயர்ந்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார். இதேபோல், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார்.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கோபிசெட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.ஏ. செங்கோட்டையன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21-ஆம் தேதி வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி காலமானார். அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுச்சாமியும் காலமானார். இதனால் இவ்விரு தொகுதிகளும் ஏற்கனவே காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தன.

தற்போது 3 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மற்றும் 2 எம்.எல்.ஏ.க்களின் மறைவு என தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. தமிழக பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளதால், விதிமுறைப்படி இந்தத் தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. இதனால் இந்த 5 தொகுதிகளும் வரும் பொதுத்தேர்தலையே நேரடியாகச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.