விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக உடனான கூட்டணி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். தவெக ஆட்சி அமைப்பதற்குத் தங்களது கட்சி வழங்கும் ஆதரவு என்பது “நிபந்தனையற்ற ஆதரவு” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள அவர், எந்தச் சூழ்நிலையிலும் தாங்கள் அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம் என்பதை ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தோழர்கள் சிலர் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என இன்னும்பேசிக் கொண்டிருந்தாலும், கட்சியின் தலைவர் என்ற முறையில் தாம் எடுத்த முடிவே இறுதியானது என்றும், தற்போதைக்குத் தாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்ந்து நீடிப்பதாகவும் அவர் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
தவெக மற்றும் அதிமுக தலைவர்கள் யாரும் தங்களை அதிகாரப்பூர்வமாக அணுகவில்லை என்றும், அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் மத்தியஸ்தர்களின் பேச்சுக்கள் சாதாரணமானவை என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் விமர்சித்ததையும், அது பாஜகவுடன் நட்பு பாராட்டும் கட்சி என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், அதிமுகவினர் சிலர் கட்சியை உடைத்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவளிப்பது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்றும், ஒருவேளை அதிமுக அதிகாரப்பூர்வமாக தவெகவுக்கு ஆதரவு அளித்தால், தங்களது அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து விசிக உயர்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், திமுக – அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியாகும் தகவல்கள் வெறும் ‘கிசுகிசு’ மட்டுமே தவிர, அதில் எந்தவித அதிகாரப்பூர்வ உண்மையும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
