தமிழக காவல்துறையில் முக்கிய உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், புதிய பொறுப்புகளை வழங்கியும் தமிழக அரசின் உள்துறை (எஸ்சி) துறை இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை உள்துறை செயலகம் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்த அதிரடி மாற்றங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அதிரடி மாற்றத்தின்படி, சென்னை நிர்வாகப்பிரிவு காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) இருந்த ஜி. வெங்கடராமன், IPS, சென்னை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டு, அதன் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, சென்னை காவல்துறை தலைமை அலுவலக ஐ.ஜி-யாக இருந்த கே. பவானீஸ்வரி, IPS, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட “சிங்கப்பெண் சிறப்பு படை” ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டு புதிய பொறுப்பேற்றுள்ளார்.
மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அவினாஷ் குமார், IPS, பிரவீன் குமார் அபினபுவுக்குப் பதிலாக தமிழக காவல்துறை தலைமையக ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமையக ஐ.ஜி-யாக இருந்த பிரவீன் குமார் அபினபு, IPS, காலியாக இருந்த சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார். இவர்களுடன், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏ. சரவண சுந்தர், IPS, சென்னையில் காலியாக இருந்த குற்றப்பிரிவு ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சரக மற்றும் மண்டல அளவிலான மாற்றங்களில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெ. மகேஷ், IPS, காலியாக இருந்த வேலூர் சரக டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தென் சென்னை போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையராக இருந்த டாக்டர் பி. விஜயகுமார், IPS, காலியாக இருந்த சென்னை தெற்கு மண்டல சட்டம்-ஒழுங்கு இணை ஆணையராக / டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய 7 மாவட்டங்களுக்கும் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் (SP) நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி-யாக இருந்த அபிஷேக் குப்தா, IPS, தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை ரெஜிமென்டல் சென்டர் கமாண்டண்டாக இருந்த எஸ். பிருந்தா, IPS, நீலகிரி மாவட்ட எஸ்.பி-யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் பிரிவு-I எஸ்.பி-யாக இருந்த ஐ.ஷானாஸ், IPS, கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய எஸ்.பி-யாக பொறுப்பேற்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி-யாக இருந்த எஸ். அரவிந்த், IPS, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி-யாக மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல, தாம்பரம் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இருந்த அல்லாடிப்பள்ளி பவன்குமார் ரெட்டி, IPS, கோவை மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட எஸ்.பி-யாக இருந்த டாக்டர் கே. கார்த்திகேயன், IPS, தாம்பரம் மாநகர காவல் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரவீந்திரகுமார் குப்தாவும், திருவாரூர் மாவட்டத்திற்கு சதீஸ்குமாரும் புதிய காவல் கண்காணிப்பாளர்களாக (SP) நியமிக்கப்பட்டுள்ளனர்
