மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள பகத்சிங் நகர் ராஜாராம் தெருவில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயானது வீட்டின் தரை தளம் மற்றும் முதல் மாடி என வீடு முழுவதும் சூழ்ந்துகொண்டது. இந்த கோர விபத்தில் தரை தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த சஞ்சோக் பவாஸ்கர் (48), குஷால் பவாஸ்கர் (12) மற்றும் முதல் மாடியில் இருந்த ஹர்ஷதா பவாஸ்கர் (19) ஆகிய மூன்று பேரும் தீப்பொறிகளுக்கு இடையே சிக்கித் தவித்தனர்.
அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றும், மின் இணைப்பை துண்டித்தும் பலன் அளிக்கவில்லை. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து, பாதிக்கப்பட்ட மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நள்ளிரவில் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
