தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் குறித்து சமூக வலைதளங்களில் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் பிக்பாஸ் புகழ் ஜூலி, தற்போது விஜய்க்கு எதிராக நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக சவால் விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் தமிழக இளைஞர்கள் மத்தியில் அறிமுகமான ஜூலி, பின்னர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானார். செவிலியராகப் பணியாற்றிய அவர், தற்போது கலைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அண்மைக்காலமாக நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்து ஜூலி வெளியிட்டு வரும் வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் பெண்களை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் பொன்ராஜ் என்பவருக்கு எதிராக விஜய் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஜூலி, விஜய்யை நோக்கிப் பல காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “பெண்களுக்காக நீங்கள் புகார் அளித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் அவ்வாறு புகார் அளிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? உங்கள் கட்சியைச் சேர்ந்த ‘வெர்ச்சுவல் வாரியர்ஸ்’ (Virtual Warriors) பெண்களை எவ்வளவு மோசமாக விமர்சிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அவர்களை ஏன் இதுவரை நீங்கள் தட்டிக்கேட்கவில்லை?”
மேலும் விஜய்க்கு நேரடிச் சவால் விடுத்துள்ள ஜூலி, “நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்று சொல்லுங்கள். அந்தத் தொகுதிக்கு நான் நேரடியாக வந்து உங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன். உங்கள் கட்சியினர் பெண்களுக்கு எதிராகச் செய்யும் செயல்களை எல்லாம் மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுவேன்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
ஏற்கனவே மற்றொரு வீடியோவில் விஜய்யை விமர்சித்திருந்த ஜூலி, சமீபத்தில் விஜய்யைச் சந்திக்க வந்த ரசிகர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தார். “ஒரு உயிர் பிரிந்ததற்கு நீங்கள் ஒரு இரங்கல் கூடத் தெரிவிக்கவில்லை” என்று அவர் முன்வைத்த குற்றச்சாட்டு ஏற்கனவே சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியிருந்தது.
மேலும் நடிகர் விஜய் அரசியலில் களம் கண்டுள்ள நிலையில், அவருக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் ஜூலியின் இந்த அதிரடி முடிவும், சவாலும் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
