திருமணமான நபர் மற்றொருவருடன் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பும், மனைவியுடன் கட்டாயப்படுத்தி உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல என்ற மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தீர்ப்பும் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தத் தீர்ப்புகள் குறித்து தனது வேதனையையும், எதிர்ப்பையும் நடிகையும், தமிழக பாஜக துணைத் தலைவருமான குஷ்பு தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நீதிமன்றங்களின் இத்தகையத் தீர்ப்புகள் மிகுந்த மனவேதனையையும், ஏமாற்றத்தையும் அளிக்கின்றன. இவை நமது சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்வது போல அமைந்துள்ளன. நீதிமன்றங்கள் மற்றும் சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்து இதைக் கேட்கிறேன், பெண்களுக்கு இது போன்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டால், அவர்கள் நீதிக்காக வேறு எங்கே செல்வார்கள்?
பெண்களின் தனிப்பட்ட உரிமை குறித்து அவர் கூறுகையில், “இயற்கையான அல்லது இயற்கைக்கு மாறான உடலுறவாக இருந்தாலும், அதற்கு ‘வேண்டாம்’ என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. ஒரு பெண் மறுப்பு தெரிவித்தால், அதற்கு ‘வேண்டாம்’ என்றுதான் அர்த்தம். ஆண்கள் அதனை மதிக்கப் பழக வேண்டும். மனைவியின் விருப்பமின்றி கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது பாலியல் வன்புணர்வாகவே கருதப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்
மேலும், திருமணமான நபர் வேறொருவருடன் வாழும் ‘லிவ்-இன்’ உறவு குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், ஒரு ஆண் திருமணமான நிலையில் இருக்கும்போதே, இன்னொரு பெண்ணுடன் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது எப்படிச் சரியாகும்? இந்த விதி ஆண்களுக்கு மட்டும்தானா அல்லது பெண்களுக்கும் பொருந்துமா? சட்டப்படி இது போன்ற உறவுகள் சரி என்றால், பிறகு எதற்காகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
“பெண்களுக்கு வழங்கப்படும் நீதியில் சட்டம் இன்னும் கூடுதல் அக்கறையுடனும், இரக்கத்துடனும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு பெண்ணின் கண்ணியத்தையும், நேர்மையையும் பாதுகாக்க வேண்டியது சட்டத்தின் அடிப்படை கடமை” என்று தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார் குஷ்பு.
மேலும் சமூக வலைதளங்களில் குஷ்புவின் இந்தப் பதிவு தற்போது பெரும் வரவேற்பைப் பெற்று வருவதோடு, இத்தீர்ப்புகள் குறித்த விவாதத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.
