தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும், எம்பி மாணிக்கம் தாகூருக்கும் இடையே மோதல் முற்றியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செல்வப்பெருந்தகை கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “எங்களுக்குள் நடப்பது அண்ணன், தம்பி போன்ற குடும்பப் பிரச்சனைதான்; மற்றபடி நாங்கள் ராகுல் காந்தி மற்றும் கார்கேவின் தலைமையின் கீழ் ஒன்றாகவே இருக்கிறோம்” என்று கூலாகப் பதிலளித்தார்.
கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சிக்குள் நிர்வாகிகள் மாற்றம் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாகப் புகைச்சல் நீடித்து வந்தது. குறிப்பாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை வரை சென்ற இந்த விவகாரம், மாணிக்கம் தாகூரின் இந்த விளக்கத்தால் தற்போது தற்காலிகமாக ஓய்ந்துள்ளதாகத் தெரிகிறது. “நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்” என்று அவர் அழுத்தமாகக் கூறியிருப்பது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
