சொந்தமாக வீடு வாங்க ஆசைப்பட்டு 1.17 கோடி ரூபாய் ஹோம் லோன் (Home Loan) கேட்ட நபருக்கு, லோன் பிராசஸிங் கட்டணமாக (Processing fee) மட்டுமே 1,00,079 ரூபாய் கட்ட வேண்டும் என வங்கி தரப்பில் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
பொதுவாக இவ்வளவு பெரிய கடனுக்கு மாத இஎம்ஐ (EMI) தான் பெரிய சுமையாக இருக்கும் என்று நினைத்த அந்த நபருக்கு, இந்த ஆரம்ப கட்டணமே தலைவலியை ஏற்படுத்தியதால், “இவ்வளவு பெரிய தொகையை வாங்குவது சாதாரணமான ஒன்றா, அல்லது இதைக் குறைக்க பேரம் பேச முடியுமா?” என்று எக்ஸ் (X) தளத்தில் பூஜா என்ற பயனர் மூலமாக இந்த விவகாரம் விவாதமாக மாற்றப்பட்டது.
இந்த சோசியல் மீடியா பதிவு இணையத்தில் பயங்கர ட்ரெண்டானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களின் குமுறல்களையும், அனுபவங்களையும் கமெண்ட்டுகளில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
இந்தியாவின் முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 0.5% வரை பிராசஸிங் கட்டணம் மற்றும் லீகல், வேல்யூவேஷன் கட்டணங்களை வசூலிப்பது வழக்கம் என்றாலும், 1 லட்சம் ரூபாய் என்பது மிக அதிகம் என்றும், நல்ல சிபில் ஸ்கோர் (CIBIL) மற்றும் நிலையான வருமானம் இருந்தால் வங்கிகளிடம் பேசி இந்தத் தொகையை நிச்சயம் பாதியாகக் குறைக்கவோ அல்லது முழுமையாகத் தள்ளுபடி செய்யவோ முடியும் என்று பலரும் ஐடியா கொடுத்துள்ளனர்.
மேலும் சில வாடிக்கையாளர்கள், லோன் டாக்குமெண்ட்டுகளில் கையெழுத்து வாங்கும் கடைசி நேரத்தில் மட்டுமே வங்கிகள் இதுபோன்ற மறைமுகக் கட்டணங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தி இன்சூரன்ஸ் திட்டங்களையும் தலையில் கட்டுவதாகத் தங்களின் ஆதங்கத்தைப் பதிவிட்டு வருவதால் இந்த விவகாரம் தற்போது நெட்டில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.
