சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் கட்சித் தாவல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மிக நெருங்கிய ஆதரவாளரும், மதுரையின் முன்னாள் துணை மேயருமான எம். மன்னன், இன்று (பிப். 17) சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். மதுரை அரசியலில் அழகிரியின் வலதுகரமாகச் செயல்பட்டு வந்த மன்னனின் இந்த மாற்றம், தென் மாவட்ட திமுக-வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அழகிரி ஆதரவாளர்கள் மீண்டும் திமுக-வில் சேர்க்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், மன்னன் அதிமுக-வில் இணைந்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மாற்றுக்கட்சி முக்கியத் தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் கட்சியைப் பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். “தென் மண்டலத்தில் அதிமுக-வை அசைக்க முடியாது” என்பதைக் காட்டவே இந்த அதிரடித் திட்டம் அரங்கேறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
