தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் மக்களின் சுகாதாரத்தில் அரசு அலட்சியம் காட்டி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். குறிப்பாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொசுத் தொல்லை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாகவும், இதனால் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆயிரக்கணக்கானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு நேரத்தில் பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், கடந்த இரண்டு மாதங்களாக கொசு மருந்து அடிக்கும் பணியாளர்கள் யாரும் வரவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுவதையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் கொசு ஒழிப்புப் பணிகளுக்காக 2025-26 ஆம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சி ஒதுக்கீடு செய்த சுமார் 16.40 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, இந்த நிதியிலும் ஊழல் நடந்துள்ளதாலேயே கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கொசு ஒழிப்புப் பணியாளர்களைச் சுய விளம்பரப் பணிகளுக்குப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, போர்க்கால அடிப்படையில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களின் உயிரோடு விளையாடும் இந்த “விடியா அரசுக்கு” மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் கடுமையாக எச்சரித்துள்ளார்.
