மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி பேசிய கருத்துகள், திமுக – காங்கிரஸ் கூட்டணியிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. “எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணை ஏறியிருக்க முடியாது எங்களுக்குத் தகுந்த மரியாதை அளிக்கப்பட வேண்டும், இல்லையெனில் திருப்பி அடிப்போம்” என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளானது.
இந்தக் கருத்து தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மேலிடத்திற்கு அறிக்கை அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பு அதிகரித்துள்ளது. இந்த அரசியல் மோதல்களுக்கு மத்தியில், மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் மகாகவி பாரதியாரின் “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என்ற வீரமிக்க வரிகளைப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது துணிச்சலான பேச்சுக்குக் கட்சியினரிடமிருந்தோ அல்லது கூட்டணிக் கட்சியிடமிருந்தோ எவ்வித அழுத்தங்கள் வந்தாலும், தான் பின்வாங்கப் போவதில்லை என்பதையே இந்தப் பதிவு மறைமுகமாக உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
