ஐபிஎல் 2026 தொடர் தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவின் அதிரடியான உடல் எடை குறைப்பு மற்றும் ஃபிட்னஸ் மாற்றத்தைக் கண்டு அந்த அணியின் உரிமையாளர் நீதா அம்பானி வியப்பில் ஆழ்ந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ரோகித் சர்மாவின் உடல் தகுதி (Fitness) குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சர்வதேச ஒருநாள்  போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் ரோகித், தனது உடல் எடையைக் குறைக்கக் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

பயிற்சி முகாமிற்கு வந்த ரோகித்தைப் பார்த்த நீதா அம்பானி, “கடவுளே ரோகித்! உங்களை அடையாளமே தெரியவில்லை. ஒரு இளம் சிறுவனைப் போல மிகத் தெளிவாகக் காட்சியளிக்கிறீர்கள்,” எனத் தனது வியப்பை வெளிப்படுத்தினார். ரோகித்தின் இந்த ‘ஸ்லிம்’ லுக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது 6-வது ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த சில சீசன்களாக அந்த அணியின் பேட்டிங் வரிசை தடுமாறி வந்த நிலையில், இந்த ஆண்டு அணி மிகவும் வலுவாகக் காணப்படுகிறது.

குறிப்பாக, தொடக்க வீரராக ரோகித் சர்மா அதிரடி காட்டினால், அது மிடில் ஆர்டரில் உள்ள சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா மீதான அழுத்தத்தைக் குறைக்கும். கடந்த 4-5 ஆண்டுகளாக ரோகித்தின் ஆட்டமுறை (Strike Rate) மாறியுள்ளது. முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டும் அவரது உத்தி மும்பை அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.

இந்த ஐபிஎல் தொடர் ரோகித் சர்மாவுக்கு ஒரு முக்கியமான தளமாகும். 2027-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்குத் தயாராவதற்கு இந்த ஐபிஎல் ஒரு உந்துசக்தியாக இருக்கும் என அவர் கருதுகிறார்.

மேலும் மும்பை அணியில் ஹர்திக்பாண்டியா (கேப்டன்), ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரயான் ரிக்கெல்டன், குயின்டன் டி காக், தனிஷ் மலேவர், திலக் வர்மா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், ராஜ் அங்கத் பாவா, அதர்வா அங்கோலேகர், மயங்க் ராவத், கார்பின் போஷ், வில் ஜாக்ஸ், ஷர்துல் தாக்கூர், டிரெண்ட் போல்ட், மயங்க் மார்கண்டே, தீபக் சாஹர், அஸ்வானி குமார், ரகு சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது இஸ்ஹார், அல்லாஹ்கசன்ஃபர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.