பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஆகிய இரு தொடர்களும் இந்த ஆண்டு ஒரே நேரத்தில் நடைபெறுவதால், நட்சத்திர வீரர்களும் வர்ணனையாளர்களும் பாகிஸ்தானைப் புறக்கணித்து இந்தியாவுக்குப் படையெடுத்து வருகின்றனர். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (PCB) பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வர்ணனையாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் இங்கிலாந்தின் மூத்த வர்ணனையாளர் நிக் நைட் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், அடுத்த சில தினங்களிலேயே அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஐபிஎல் வர்ணனையாளர் குழுவில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பிளெசிங் முசரபானி, ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் தசுன் ஷனகா போன்ற முன்னணி வீரர்கள் பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகி ஐபிஎல் பக்கம் சென்றுள்ள நிலையில், இப்போது வர்ணனையாளர்களும் அதே பாதையைப் பின்பற்றுவது பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2026 மற்றும் பிஎஸ்எல் 2026 ஆகிய இரண்டு தொடர்களும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. இதனால் வீரர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் வழங்கப்படும் ஊதியம் மற்றும் வசதிகளுடன் ஒப்பிடும்போது பிஎஸ்எல் மிகவும் பின்தங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் உடனான போர் போன்ற சூழலால் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் அங்கு பயணம் செய்யத் தயக்கம் காட்டுவதாகவும், வெளிநாட்டு வீரர்கள் கூடுதல் பணம் கோருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் விலை உயர்வு மற்றும் பொருளாதாரச் சிக்கல் காரணமாக, இந்த ஆண்டு பிஎஸ்எல் தொடர் வெறும் இரண்டு நகரங்களில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. இது தொடரின் உற்சாகத்தைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது.
பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, ஒப்பந்தத்தை மீறி விலகும் வீரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இருப்பினும், இது நீண்ட கால அடிப்படையில் வெளிநாட்டு வீரர்களை பாகிஸ்தான் பக்கம் ஈர்ப்பதற்கு தடையாக அமையும் என கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலையிட வேண்டும் என்றும் பிசிபி விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் குழுவில் ஏபி டி வில்லியர்ஸ், ஏரன் பின்ச், டேல் ஸ்டெய்ன், பாப் டு பிளசிஸ், இயான் மோர்கன், கெவின் பீட்டர்சன், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி மற்றும் ஹர்ஷா போக்லே போன்ற ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் நிக் நைட்டும் இணைந்திருப்பது ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
