இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா, மைதான ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, ஹர்திக் பாண்டியா மும்பை வான்கடே மைதானத்தில் நள்ளிரவு வரை தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அந்தச் சமயத்தில், அவருக்குத் துணையாக இருந்து மைதானத்தைப் பராமரித்த மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (MCA) ஊழியர்களிடம், “உலகக் கோப்பை முடிந்து திரும்பியதும் உங்களைக் கவனிப்பேன்” என்று பாண்டியா உறுதியளித்திருந்தார்.

தற்போது உலகக் கோப்பையில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மும்பை திரும்பிய பாண்டியா தனது வாக்கை நிறைவேற்றியுள்ளார். அதன்படி கடந்த வியாழக்கிழமையன்று வான்கடே மைதான ஊழியர்களைச் சந்தித்த அவர், கடினமான சூழலிலும் தனக்குப் பயிற்சியின் போது உதவியதற்காக ஒவ்வொரு ஊழியருக்கும் தலா ரூ. 10 லட்சம் வெகுமதியாக வழங்கிக் கௌரவித்துள்ளார்.

பாண்டியாவின் இந்த மனிதாபிமானச் செயலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். “வாக்கு கொடுப்பது எளிது, ஆனால் அதை நிறைவேற்றுவதுதான் ஒருவரின் குணத்தை வரையறுக்கும்”, “திரைக்குப் பின்னால் உழைக்கும் மனிதர்களை ஹர்திக் மறக்கவில்லை” எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது உச்சத்தில் உள்ள நிலையில், அவர் செய்துள்ள இந்த உதவி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.