பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது மைதானத்திற்கு வெளியேயும் தங்களது செயல்களால் விவாதப் பொருளாக மாறுவது வழக்கம். அந்த வகையில், பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமது, இங்கிலாந்தின் முன்னாள் வீரர் டொமினிக் கார்க்கை கிண்டல் செய்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதாவது சமீபத்தில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது, இங்கிலாந்து முன்னாள் வீரர் டொமினிக் கார்க், முஷ்டாக் அகமதுவிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். “ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவுக்கு இந்த ஆடுகளத்தில் பந்து வீச நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்?” என்று கேட்டார்.

இதற்குப் பதில் அளிக்கத் தொடங்கிய முஷ்டாக் அகமது, திடீரென டொமினிக் கார்க்கின் பழைய கிரிக்கெட் வாழ்க்கையை நினைவுபடுத்தி அவரைச் சங்கடப்பட வைத்தார்.

முஷ்டாக் அகமது சிரித்துக்கொண்டே கூறுகையில், “ஜம்பாவுக்கு ஏதேனும் சொல்வதற்கு முன்னால், உனக்கு ஒன்று நினைவிருக்கிறதா? நீ எத்தனை முறை என்னுடைய பாக்கெட்டுக்குள் (அதாவது எத்தனை முறை உன்னை அவுட் செய்திருக்கிறேன்) இருந்தாய் என்று தெரியுமா? டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல்தர கிரிக்கெட் என அனைத்திலும் உன்னை நான் காலி செய்திருக்கிறேன், அது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது,” என்றார்.

இதனால் சற்றே அதிர்ச்சியடைந்த டொமினிக் கார்க், “நீங்கள் என்னை ஓரிரு முறை அவுட் செய்திருக்கலாம்” எனத் தற்காத்துக் கொள்ள முயன்றார். ஆனால் விடாத முஷ்டாக் அகமது, “இல்லை, பலமுறை அவுட் செய்திருக்கிறேன்” என அழுத்தமாகக் கூறினார்.

உடனே கார்க், “எனக்குத்தான் பேட்டிங் ஆடவே தெரியாதே” என்று சமாளிக்கப் பார்த்தார். அதற்கு முஷ்டாக், “ரொம்ப அடக்கம் காட்டாதே, நீ இங்கிலாந்து அணிக்காக ஒரு ஆல்-ரவுண்டராக விளையாடியவன்” என மீண்டும் கலாய்த்தார்.

இறுதியில் நிலைமையைச் சமாளிக்க விரும்பிய டொமினிக் கார்க், பேச்சை மீண்டும் ஆடுகளம் மற்றும் ஆடம் ஜம்பா பக்கம் திருப்பினார். மேலும் சாதாரணமாக இங்கிலாந்து வீரர் ஒருவர் கேள்வி கேட்டு நிலையில் அதற்கு இப்படி பாகிஸ்தான் முன்னால் வீரர் பதில் சொல்லியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.