பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 11-வது சீசன் தொடங்கியுள்ள நிலையில், அந்த நாட்டின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் விளம்பரப் படப்பிடிப்பின் போது மிக எளிதான கேட்ச் ஒன்றைக் கோட்டைவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஎஸ்எல் 2026 தொடரில் பெஷாவர் சால்மி அணியின் கேப்டனாக பாபர் அசாம் செயல்படுகிறார். இந்தத் தொடருக்கான விளம்பரப் படப்பிடிப்பு ஒன்றில் பாபர் அசாம் பங்கேற்றார். அதில், காற்றில் பாய்ந்து (Dive) ஒற்றைக் கையால் பந்தைப் பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. பாபர் அசாம் கீழே விழும்போது காயம் ஏற்படாமல் இருக்க தரைப்பகுதியில் மெத்தைகள் விரிக்கப்பட்டிருந்தன.

வீடியோவில் பாபர் அசாம் பந்தைப் பிடிக்க காற்றில் பாய்ந்து கையில் ஏந்துகிறார். ஆனால், மெத்தையில் விழுந்த அடுத்த நொடியே பந்து அவர் கையிலிருந்து நழுவி கீழே விழுகிறது. மெத்தையில் விழுந்த பிறகும் பந்தைப் பிடிக்க முடியாமல் அவர் திணறியது கேமராக்களில் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே பாபர் அசாமின் ‘ஃபிட்னஸ்’ குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், இந்த வீடியோ அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் பாபர் அசாம் நீக்கப்பட்டதற்கு அவரது மோசமான உடல் தகுதியே காரணம் என பிசிபி சமீபத்தில் தெரிவித்திருந்தது. 2026 டி20 உலகக் கோப்பையின் போதே அவருக்கு ஃபிட்னஸ் சிக்கல்கள் இருந்தும், அவர் அணியில் தொடர்ந்தது இப்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமின் மெதுவான ஆட்டமுறை  குறித்து உலகக் கோப்பை முதலே கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இன்று (மார்ச் 28) லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெறும் ராவல்பிண்டி அணிக்கு எதிரான முதல் போட்டியில் பாபர் அசாம் பங்கேற்க உள்ளார். இதில் அவரது பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் எப்படி இருக்கப்போகிறது என்பதை ரசிகர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.

விளம்பரத்திற்காகக் கூட சரியாக கேட்ச் பிடிக்க முடியாத ஒருவரை எப்படி நட்சத்திர வீரர் என அழைக்க முடியும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.