அமெரிக்காவில், காரில் இருந்த செல்லப் பிராணி நாய் ஒன்று தவறுதலாக துப்பாக்கியை இயக்கியதில், சாலையில் காரில் காத்திருந்த பெண் ஒருவர் காயமடைந்த விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் போஸ்ட் இதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் மற்றும் மற்றொரு பயணியை தனது பிக்-அப் டிரக் ரக காரில் அமர வைத்துவிட்டு, அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, காரின் பின் இருக்கையில் இருந்த நாய் திடீரென துள்ளிக் குதித்து விளையாடியுள்ளது. அந்த சமயத்தில், காரில் வைக்கப்பட்டிருந்த தோட்டாக்கள் நிரப்பப்பட்ட ‘ஷாட்கன்’ துப்பாக்கியின் மீது நாயின் கால் பட்டதில், அதன் ட்ரிக்கர் எதிர்பாராதவிதமாக அழுத்தப்பட்டு துப்பாக்கி வெடித்தது.
துப்பாக்கியில் இருந்து வெளிவந்த தோட்டாக்கள் காரின் கதவை கிழித்துக் கொண்டு, வெளியே டிராஃபிக் சிக்னலில் தனது காரில் காத்திருந்த ஒரு பெண்ணின் கையில் பாய்ந்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் மற்றும் போலீசார், காரில் இருந்து புகை வருவதையும், உள்ளே நாய் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சட்டப்படி காரில் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை வைத்திருப்பது சட்டவிரோதமாகும். இதனால், நாய் துப்பாக்கியை சுட்ட விவகாரத்தில், அதன் உரிமையாளரின் அலட்சியப் போக்கை சுட்டிக்காட்டி அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
