பாகிஸ்தானில் உள்ள குழந்தைகளுக்கு அந்நாட்டின் பாடப்புத்தகங்கள் வழியாக தவறான வரலாறு கற்பிக்கப்படுவதாகவும், மக்கள் தங்களது உண்மையான கலாசார அடையாளங்களில் இருந்து திட்டமிட்டு தூரமாக்கப்படுவதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களாகிய தாங்கள் தங்களது இந்து முன்னோர்களை வெறுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள பாதி மக்கள் தங்களது முன்னோர்கள் சவூதி அரேபியா அல்லது ஈரானில் இருந்து வந்தவர்கள் என்று பொய் வாதிடுவதாகவும், அடுத்த தலைமுறையினரை ஒரு குறிப்பிட்ட மனநிலைக்குள் சுருக்குவதற்காகவே இத்தகைய போலி வரலாறு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சந்திரகுப்த மௌரியர், பேரரசர் அசோகர் ஆகியோர் இந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் இருந்து அவர்களது வரலாறு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக கவாஜா ஆசிஃப் சாடியுள்ளார். தங்களது உண்மையான முன்னோர்கள் இந்துக்கள் என்பதால் தாங்கள் பாகிஸ்தானியர்கள் என்பதில் எந்தக் குறைவும் ஏற்பட்டுவிடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே, இஸ்ரேலை பாகிஸ்தான் அங்கீகரிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 1967-ஆம் ஆண்டின் எல்லைகளின்படி கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு தனி பாலஸ்தீன நாடு உருவாகும் வரை, பாகிஸ்தான் ஒருபோதும் இஸ்ரேலை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காது என்றும், நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு உடன்படிக்கையிலும் பாகிஸ்தான் பங்கேற்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.