தமிழக வெற்றி கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் பொது இடங்களில் தொடர்ந்து விசில் அடித்து ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் செல்பவர்கள், குடியிருப்புகளில் இருப்பவர்கள் என யாருடைய நலனையும் கருத்தில் கொள்ளாமல், காது கிழிக்கும் வகையில் இடைவிடாது விசில் சத்தம் எழுப்புவது பொதுமக்களுக்கு மிகுந்த எரிச்சலையும் இடையூறையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கொண்டாட்டம் என்பது மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பதை மறந்து, தவெக தொண்டர்கள் செய்யும் இந்த ‘விசில்’ கலாட்டா இப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

​”தேர்தல் வரைக்கும் இந்த இரைச்சல் தாங்காது போலிருக்கே” என்று பொதுமக்கள் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர். ஒரு அரசியல் கட்சி வளரும்போது அதன் தொண்டர்கள் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும், ஆனால் தவெக-வினர் பொது இடங்களில் ஏற்படுத்தும் இந்த ஒலி மாசுபாடு (Noise Pollution) எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். உற்சாகம் என்பது ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும் என்றும், மற்றவர்களின் அமைதியைக் கெடுக்கும் வகையில் விசில் அடிப்பது ‘நூயிசன்ஸ்’ (Nuisance) என்றும் அந்த வீடியோவைப் பகிர்பவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.