ராஜஸ்தான் போபா பகுதியில் உள்ள நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு, 24 வயது இளைஞரான டிங்கு, விஷமுள்ள கோப்ரா பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். சனிக்கிழமை மாலை 7 மணியளவில், மோர்னா கிராமத்தில் உள்ள மங்களின் வீட்டில் ஒரு கோப்ரா பாம்பு வந்தது. பாம்பைப் பிடிக்க, அக்கம்பக்கத்தைச் சேர்ந்த டிங்கு அழைக்கப்பட்டார். எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், அவர் தன் கைகளால் பாம்பைப் பிடித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்யத் தொடங்கினர்.

வீடியோ பதிவு செய்யப்படுவதைக் கண்ட டிங்கு, பாம்பை பையில் போடாமல், அதனுடன் விளையாடத் தொடங்கினார். சுமார் 15 நிமிடங்கள், கோப்ராவை கழுத்தில் போட்டுக்கொண்டும், காற்றில் தூக்கி எறிந்தும், இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ எடுக்க முயன்றார். அப்போது, பாம்பு அவரது கழுத்திலும் கையிலும் கடித்துவிட்டது. அவர் போதையில் இருந்ததால், பாம்பு கடித்ததை உணரவே இல்லை என்று கூறப்படுகிறது. பின்னர், அவர் பாம்பை ஒரு பையில் போட்டு, வீட்டிலிருந்து தொலைவில் விட்டுவிட்டு, இரவு 9 மணியளவில் வீடு திரும்பினார்.

இரவு உணவு சாப்பிட்ட பிறகு, டிங்கு தூங்கச் சென்றார். இரவு 11 மணியளவில் அவரது உடல்நிலை மோசமாகி, உடல் நீலமாக மாறியது. இதை பார்த்த குடும்பத்தினர் சத்தமிட்டதால் விஷயம் தெரியவந்தது. உடனடியாக அவரை சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.