தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

நேற்று செங்கல்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவை ஒரு தீய சக்தி என்று குறிப்பிட்டதோடு, அந்த ஆட்சியைத் தமிழகத்திலிருந்து அடியோடு அகற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் லட்சியம் என்று சூளுரைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் எதற்காக அதிமுகவைத் தொடங்கினாரோ, அந்த லட்சியத்தை நிறைவேற்றும் காலம் கனிந்துவிட்டதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, இன்னும் மூன்றே அமாவாசை நாட்களில் திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்று அதிரடியாகத் தெரிவித்தார். இவருடைய இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.