பாகிஸ்தானின் மிக முக்கியமான மற்றும் கலவரம் நிறைந்த மாகாணமான பலுசிஸ்தானில் வன்முறை வெடித்துள்ளது. அங்குள்ள பிரிவினைவாத அமைப்பான ‘பலுசிஸ்தான் விடுதலை அமைப்பு’  தான் நடத்திய இரண்டு வெவ்வேறு அதிரடித் தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 25 வீரர்கள் கொல்லப்பட்டதாகத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

பி.எல்.ஏ அமைப்பின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘ஹக்கல்’ வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த வெள்ளிக்கிழதியன்று ஜியாரத் கிராஸ் பகுதியில் ராணுவக் வாகனக் காவலில் சென்ற வாகனங்கள் மீது பி.எல்.ஏ-வின் பிரத்யேகப் பிரிவான ‘ஃபதேஹ் ஸ்குவாட்’ தீவிரவாதிகள் திடீர் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பில் ராணுவத்தின் இரண்டு வாகனங்கள் முற்றிலுமாகத் தரைமட்டமாயின. இந்தத் தாக்குதலில் 18 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், காயமடைந்த மேலும் 5 வீரர்கள் தப்பியோடியதாகவும் அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. தீப்பிடித்து எரியும் ராணுவ வாகனங்களுக்கு அருகில் தீவிரவாதிகள் நிற்கும் மற்றும் சேதமடைந்த வாகனங்களிலிருந்து ஆயுதங்களைக் கொள்ளையடிக்கும் சினிமாத்தனமான வீடியோ காட்சிகளையும் BLA வெளியிட்டுள்ளது.

மலைப்பகுதிகளில் கொரில்லா யுத்த உத்திகளைக் கையாள்வதில் வல்லமை பெற்ற இந்த ‘ஃபதேஹ் ஸ்குவாட்’ அமைப்பினர்தான், கடந்த 2025 மார்ச் மாதத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தல் சம்பவத்தின் பின்னணியிலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சுரப் பகுதியிலுள்ள ஹஜிகா என்ற இடத்தில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில், BLA அமைப்பின் ‘STOS’ எனப்படும் சிறப்புப் பிரிவு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்ட கார் குண்டுத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மேலும் 7 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் இந்த உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதையும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும், ராணுவத் தளபதி ஆசிம் முனீரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டையை இந்தச் சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில், கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்களை இரவின் மறைவில் அவர்களின் குடும்பத்தினரிடம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி இரகசியமாக ஒப்படைக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பி.எல்.ஏ தொடங்கிய ‘ஆபரேஷன் ஹெரோஃப்’  தாக்குதல்களை நினைவுபடுத்தும் வகையில் தற்போதைய வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. கராச்சி-குவெட்டா நெடுஞ்சாலை மற்றும் மஸ்துங் ரயில் நிலையம் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்காக வைத்து நடத்தப்பட்ட முந்தைய தாக்குதல்களிலும் டஜன் கணக்கான ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட அதிரடித் தேடுதல் வேட்டையில், மஸ்துங், சிபி, குவெட்டா மற்றும் கலாதத் மாவட்டங்களில் பதுங்கியிருந்த BLA மற்றும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 50 பேர்  சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு ஆண்டுகளாகத் தங்களுக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பலுசிஸ்தான் போராளிகள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், இரு தரப்புக்கும் இடையேயான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.