அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்றில் நடுவானில் திடீரெனப் பயங்கர வன்முறை வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ்-போர்ட் வொர்த்  நகரத்திலிருந்து நியூவார்க் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், ஒரு பயணியின் வன்முறைச் செயலால் மேரிலாந்து மாநிலம் பால்டிமோர் நகருக்கு அவசரமாகத் திசைதிருப்பித் தரையிறக்கப்பட்டது.

விமானம் புறப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் அமைதியாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு பயணி ஆக்ரோஷமாக மாறினார். இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த ஓய்வுபெற்ற சட்ட அமலாக்க அதிகாரியான ஜுவான் மெஜியா மற்றும் ரிச்சர்ட் ஓலெனிக் கூறுகையில், “ஒரு லைட் சுவிட்சைப் போல திடீரென அந்த அமைதியான சூழல் மாறி, கூச்சலும் குழப்பமும் வெடித்தது” என்று விவரித்தனர்.

அந்த நபர் தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த சக பயணியின் கழுத்தை நெரித்துத் தாக்கியதைக் கண்டதாக மெஜியா அதிர்ச்சியுடன் தெரிவித்தார். நிலைமை கையை மீறிச் செல்வதைக் கண்ட விமானப் பணியாளர்கள் மற்றும் சக பயணிகள் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு அந்த நபரைத் தடுத்து நிறுத்தினர்.

வன்முறையில் ஈடுபட்ட பயணியைக் கட்டுப்படுத்த விமானப் பணியாளர்கள் ஜிப் டை  வழங்கினர். அதனைப் பயன்படுத்திய பயணிகளும் பணியாளர்களும், மேலும் பாதுகாப்பிற்காக டக்டேப் கொண்டு அவரது கைகளையும் உடலையும் இருக்கையோடு சேர்த்துக் கட்டிப் போட்டனர். ஓலெனிக் என்ற பயணி வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அந்த நபர் டேப்புகளால் முழுமையாகக் கட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

 

சண்டைக்கு முன்பு விமானப் பணியாளர் ஒருவர் அந்தப் பயணியை அமைதிப்படுத்த முயன்றபோது, அவர் விமானப் பணியாளரை நோக்கித் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், இனவெறி மற்றும் ஓரினச்சேர்க்கை வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அவதூறாகப் பேசியதாகவும் சக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விமானத்தில் தொடர்ந்து நிலவிய கலவரச் சூழலைக் கருத்தில் கொண்டு, விமானிகள் பாதுகாப்பாகப் பால்டிமோர் விமான நிலையத்திற்கு விமானத்தைத் திசைதிருப்பித் தரையிறக்கினர். விமானம் தரையிறங்கியதும், அங்குள்ள சட்ட அமலாக்க அதிகாரிகள் உடனடியாக அந்தப் பயணியைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். அதன்பிறகு, விமானம் மீண்டும் தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டு நியூவார்க் சென்றடைந்தது.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எங்களது முதன்மையான முன்னுரிமையாகும்; இதுபோன்ற வன்முறைகளை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்” என்று தெரிவித்து, துணிச்சலாகச் செயல்பட்ட பணியாளர்களுக்கும் பயணிகளுக்கும் நன்றி தெரிவித்தது. தற்போது, இந்தச் சம்பவம் தொடர்பாக எஃப்.பி.ஐ தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகத்துடன் பேசி அந்த நபர் மீது கடுமையானக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.