அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம் போலின் என்பவர், தனது கிராமத்தில் உலகின் மிகப்பெரிய காற்று மணியை உருவாக்கி 12 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார். மக்கள் வருகை குறைந்து காணப்பட்ட சிறிய கிராமத்தை சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அவர் இந்த வித்தியாசமான முயற்சியை தொடங்கினார். தனது பாட்டி வைத்திருந்த சிறிய காற்று மணியை முன்மாதிரியாகக் கொண்டு, கடந்த 2012-ஆம் ஆண்டு பிரம்மாண்டமான காற்று மணியை உருவாக்கினார்.
குழாய் அமைக்கும் தொழிலில் போலினுக்கு ஏற்கனவே அனுபவம் இருந்ததால், பிரம்மாண்டமான காற்று மணியை உருவாக்குவதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவும் பொருட்களும் அவரிடம் இருந்தன. அவர் உருவாக்கிய காற்று மணியை பொதுமக்கள் பார்வைக்காக வைத்த நிலையில், அதைப் பார்த்து கவரப்பட்ட அப்பகுதி மக்களும் பல்வேறு பிரம்மாண்ட பொருட்களை உருவாக்கத் தொடங்கினர். இதனால் அந்த சிறிய கிராமம் வித்தியாசமான பிரம்மாண்ட பொருட்கள் நிறைந்த சுற்றுலா தலமாக மாறத் தொடங்கியது.
பிரம்மாண்டமான காற்று மணியுடன், மிகப்பெரிய முட்கரண்டி, தபால் பெட்டி, ஆடும் நாற்காலி, கோல்ஃப் மட்டை உள்ளிட்ட பல பொருட்களும் அங்கு அமைக்கப்பட்டன. இவை வெறும் காட்சிப் பொருட்களாக இல்லாமல், பார்வையாளர்கள் நேரடியாக அனுபவிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து, ஒரு வார இறுதியில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் போலின் உருவாக்கிய 21 பிரம்மாண்ட பொருட்களுக்காக மொத்தம் 12 கின்னஸ் உலக சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 14.94 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய காற்று மணியும், 25.01 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய ஊஞ்சலும், 17.09 மீட்டர் உயரமுள்ள மிகப்பெரிய ஆடும் நாற்காலியும் இடம்பெற்றுள்ளன. இந்த உலக சாதனைகள் தங்களது கிராமத்தையே மிகப்பெரிய அளவில் மாற்றியுள்ளதாக போலின் தெரிவித்துள்ளார்.
