திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வரும் தேர்தலில் அமமுக எடுக்கும் முடிவே வெற்றி கூட்டணியைத் தீர்மானிக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, இதுவரை கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், தொண்டர்களின் விருப்பத்தை அறிந்து இன்னும் மூன்று மாதங்களில் இறுதி முடிவை அறிவிப்பேன் என்றும் கூறினார்.

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் விளக்கினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய்க்காக உயிரையும் கொடுப்பேன் என்று பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தினகரன், அவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிடம் மிகுந்த விசுவாசமாக இருந்தவர் என்று குறிப்பிட்டார்.

தற்போது அதிமுகவில் தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரும் செங்கோட்டையன், மக்களால் அதிகம் பேசப்படும் ஒரு புதிய கட்சியில் தனக்கு அங்கீகாரம் கிடைப்பதை பெருமையாகக் கருதி அவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.