மனித வாழ்க்கையில் சில நேரங்களில் நம்ப முடியாத பல ஆச்சரியங்கள் அரங்கேறுவதுண்டு. அப்படியொரு சிலிர்க்க வைக்கும் மற்றும் திகைப்பூட்டும் சம்பவம் தான் பஞ்சாப் மாநிலம் கபூர்சூலா மாவட்டத்தில் நடந்துள்ளது. ஒரு குடும்பம் தனது மகன் இறந்துவிட்டதாக நினைத்து இறுதிச் சடங்குகள் மற்றும் பிண்டதானம் போன்ற அனைத்துக் காரியங்களையும் முடித்த நிலையில், சரியாக 15 நாட்களுக்குப் பிறகு அவன் ஜெயிலில் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் காதுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி இவர் திடீரென வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும், உறவினர்களிடமும் தேடியும் எங்குமே அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ரவியின் தந்தை டி.டி மற்றும் அவரது சகோதரர் அமன்தீப் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி காவல் நிலையத்தில் முறையான புகாரளித்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாகக் காவல் துறையினர்,  ஒரு அடையாளம் தெரியாத சடலத்தின் புகைப்படத்தை குடும்பத்தினரிடம் காட்டியுள்ளனர். அந்தச் சடலம் நீண்ட நாட்களாகத் தண்ணீர் அல்லது குப்பையில் கிடந்ததால் அழுகிப் போய், முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறியிருந்தது. ஆனால், அந்தச் சடலம் அணிந்திருந்த உடைகளைக் கொண்டு அது ரவிகுமார் தான் என்று குடும்பத்தினர் தவறாக நம்பினர்.

தவறான இந்த அடையாளத்தால், அந்த  சடலத்தை மகன் ரவி என்று உறுதியாக நம்பிய குடும்பத்தினர், கடந்த ஆகஸ்ட் 13 அன்று கண்ணீருடன் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர். தொடர்ந்து ஆகஸ்ட் 15 அன்று ரவியின் ஆன்மா சாந்தியடைய வேண்டிய அனைத்து மதச் சடங்குகளையும்  முடித்தனர்.

ஆனால், இந்தச் சம்பவம் நடந்து சரியாக 15 நாட்கள் கழித்து செப்டம்பர் 2-ம் தேதி அன்று ஒரு போன் கால் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிப் போட்டது. அது கபூர்சூலா மத்தியச் சிறையில் இருந்து வந்த அழைப்பு. “உங்கள் மகன் ரவிகுமார் எங்களுடைய சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார்” என்று ஜெயில் ஊழியர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இத்தைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர், உடனே அடுத்த நாள்  மத்தியச் சிறைக்கு நேரில் சென்று பார்த்தனர். அங்கே ரவி தன் கண்முன்னே முற்றிலும் உயிருடன் ஆரோக்கியமாக நிற்பதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டனர். சில நாட்களுக்கு முன்பு அஸ்தி கரைத்த அதே குடும்பம், தன் மகன் உயிரோடு இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது.

விசாரணையில், ரவியைச் சில நாட்களுக்கு முன்பு ஜலந்தர் காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்ததாகக் கைது செய்து மத்திய சிறையில் அடைத்திருப்பது தெரியவந்தது. குடும்பத்திற்கு இதுபற்றிய தகவல் உடனடியாகத் தெரியவராததால் தான் இந்த பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது குடும்பத்தினருக்கு முன் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், ரவி என்று நினைத்து அவர்கள் எந்தச் சடலத்திற்கு இறுதிச் சடங்கு செய்து அஸ்தி கரைத்தார்களோ, அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பதுதான்! இந்த மர்மம் காவல்துறையினர் முன் ஒரு பெரிய புதிராகவே நீடிக்கிறது. மறுபுறம் காவல்துறை தரப்பில், “குடும்பத்தினர்தான் உடலைக் கண்டு ரவி என்று உறுதிசெய்து கொண்டு சென்றனர், இதில் எந்தவிதக் காவல் துறைத் தவறும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளனர்.