தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மோசடி தொடர்பான சிபிஐ விசாரணை, தற்போது மகாராஷ்டிராவின் முக்கிய கோச்சிங் சென்டர் நெட்வொர்க்குகளை நோக்கி நகர்ந்துள்ளது. குறிப்பாக, லாத்தூரில் இயங்கி வரும் பிரபல ‘ரெணுகாய் கெமிஸ்ட்ரி க்ளாசஸ்’ பயிற்சி மையத்தின் இயக்குநரான சிவராஜ் மொட்டேகாவ்கர் என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும் அவரது மொபைல் போனில் கசிந்த வினாத்தாள் இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வினாத்தாள்களை முன்கூட்டியே பெற்று விநியோகிக்கும் திட்டமிட்ட நெட்வொர்க்கில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, தேசிய தேர்வு முகமையால் நிபுணராக நியமிக்கப்பட்ட புனேயைச் சேர்ந்த மூத்த தாவரவியல் ஆசிரியை மனிஷா குர்நாத் மந்தாரே மற்றும் வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வுக்கு முன்பே மாணவர்களைத் திரட்டி, தங்களின் வீடுகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வினாக்களைக் கசியவிட்டு எழுதிப்போட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த வினாத்தாள் கசிவு மோசடி தொடர்பாக மகாராஷ்டிராவின் நாந்தேட், நாசிக், புனே, ராகுரி மற்றும் லாத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பயிற்சி மையங்களில் நடத்தப்பட்ட மாதிரித் தேர்வுகளில் கேட்கப்பட்ட பல கேள்விகள், அசல் நீட் தேர்வு வினாத்தாளுடன் அப்படியே ஒத்துப்போயிருப்பது பெற்றோர்கள் அளித்த புகாரின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த மோசடி விவகாரத்தில் சிபிஐ இதுவரை பலரை கைது செய்துள்ளதுடன், லேப்டாப்கள், மொபைல் போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளது. மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பல மாநில மோசடி நெட்வொர்க்கின் பின்னணியில் உள்ள இடைத்தரகர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளைப் பிடிக்க சிபிஐ தனது விசாரணையை மேலும் முடுக்கிவிட்டுள்ளது.