மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோரேகாவ் பார்க் பகுதியில், ஓடும் காரில் பெண் வழக்கறிஞர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக புனே காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். புனேயில் சட்டப் படிப்பை முடித்த அவர், தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். வழக்கு நிமித்தமாக புனே வந்திருந்த போதே அவருக்கு இந்தத் துயரம் நேர்ந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அந்தப் பெண், திருமணத் தகவல் இணையதளம் மூலம் அறிமுகமான ஒருவரைச் சந்திக்க அழைத்துள்ளார். அந்த நபர் மேலும் இரு பெண்களுடன் வந்து வழக்கறிஞரிடம் பேசியுள்ளார். சிறிது நேரத்திற்குப் பின் அவர்கள் மூவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
அதன் பின்னர், அதே விடுதியில் அமர்ந்திருந்த போது, பக்கத்து மேசையில் இருந்த இரு நபர்களுடன் அந்தப் பெண் வழக்கறிஞருக்குப் பேச்சுவார்த்தை ஏற்பட்டுள்ளது. சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் இணைந்து மற்றொரு கேளிக்கை விடுதிக்கு செல்லத் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் அனைவரும் ஒரு காரில் புறப்பட்டுள்ளனர்.
கார் சென்று கொண்டிருந்த போது, காரில் இருந்த நபர் ஒருவர் பெண் வழக்கறிஞருக்குப் பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளார். அதுமட்டுமன்றி, காரில் இருந்தவர்கள் தங்களது மற்ற நண்பர்களுக்குத் தொலைபேசியில் ‘ஸ்பீக்கர் போன்’ மூலம் தொடர்பு கொண்டு, அந்தப் பெண்ணைப் பற்றி மிக ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளனர். காரில் இருந்த மற்றவர்களும் அந்தப் பெண்ணை நோக்கி அநாகரிகமான வார்த்தைகளை வீசியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் வழக்கறிஞர், மிகுந்த தைரியத்துடன் அவர்களை எதிர்த்தார். மேலும், காரை உடனடியாக நிறுத்தி, தொலைபேசியில் பேசிய மற்ற நண்பர்களையும் அந்த இடத்திற்கு வரவழைத்து, அனைவர் முன்னிலையிலும் தன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
இதையடுத்து, காரை சாலையோரம் நிறுத்தியவுடன், காரில் இருந்து இறங்கிய பெண் வழக்கறிஞருக்கும் அந்த நான்கு பேருக்கும் இடையே நடுரோட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த நபர்கள் பெண்ணின் பணப்பையை வலுக்கட்டாயமாகப் பறித்துச் சாலையில் வீசிவிட்டு, காரில் தப்பியோடினர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடனும், தனது நண்பரைத் தொடர்பு கொண்டும், அந்தப் பெண் வழக்கறிஞர் நேரடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அபிஷேக் நவநாத் முக்டே, தன்ஞ்சய் சார்ட் மற்றும் ஆதேஷ் ஷிண்டே ஆகிய மூன்று குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள நான்காவது குற்றவாளியைத் தேட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் புனே மாநகர காவல் ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
