பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைன் மூலம் இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று, இதுவரை ஒருமுறை கூட விவரங்களைப் புதுப்பிக்காதவர்கள் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்களை ‘மை ஆதார்’ இணையதளம் அல்லது புதிய ஆதார் செயலி மூலமாக இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
முன்னதாக, இந்த இலவச ஆன்லைன் புதுப்பிப்புக்கான கால அவகாசம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், தற்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 2027 ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், பொதுமக்கள் தங்களின் ஆதார் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலமாகத் தாங்களாகவே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் போது எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.
அதே வேளையில், ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் அல்லது நேரடியாகச் செல்ல விரும்புபவர்கள், இ-சேவை மையங்கள் அல்லது பொது சேவை மையங்களுக்கு சென்று தங்களின் விவரங்களைப் புதுப்பிக்க நேர்ந்தால், அதற்கான உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் தங்களின் ஆதார் ஆவணங்களை எவ்விதக் கட்டணமுமின்றிப் புதுப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
