இன்றைய செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உலகில், சமூக வலைதளங்களில் எது உண்மை, எது பொய் என்று பிரித்தறிவது மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது. சமீபத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் போன்ற தளங்களில் 26 வயது இளைஞர் ஒருவர் சுமார் 220 கோடி ரூபாய் செலவழித்து, அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டு நாயாக மாறிவிட்டதாக ஒரு செய்தி தீயாகப் பரவி வருகிறது.

இதனுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் ஒரு நாய் மனிதனைப் போல நடப்பதும், உரையாடுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், பலரும் இதை உண்மையென நம்பி அதிர்ச்சியடைந்து அதிவேகமாகப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இந்தச் செய்தியின் பின்னணியில் இருக்கும் உண்மையை ஆராய்ந்து பார்த்தால் முற்றிலும் வேறு ஒரு சுவாரசியமான கதை வெளிவருகிறது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘டோகோ’ என்பவருக்கு சிறுவயதிலிருந்தே விலங்குகளைப் போல வாழ வேண்டும் என்ற விசித்திரமான ஆசை இருந்தது. தன் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு நாயைப் போல உருமாறி வாழ வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்ற, திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களுக்குத் தேவையான விசேஷ ஆடைகளைத் தயாரிக்கும் ஒரு பிரபல ஜப்பானிய நிறுவனத்தை அவர் அணுகினார்.

மேலும் ‘பார்டர் கோலி’ என்ற நாய் இனத்தின் தோற்றத்தை அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் வகையில், மனித உடலை முழுமையாக மறைத்து நாயைப் போன்றே காட்டக்கூடிய ஒரு சிறப்பு உடையை அந்நிறுவனம் அவருக்குத் தயாரித்துக் கொடுத்தது.

சுமார் 40 நாட்கள் தீவிர உழைப்பில், நாயின் உடலமைப்பு, தோலின் மென்மை, முடி மற்றும் கால்களின் வடிவமைப்பு என அனைத்தையும் நுணுக்கமாகக் கவனித்து இந்த ஆடை உருவாக்கப்பட்டது. இந்த ஆடைகுள் நுழைந்து கொண்டால், தூரத்தில் இருந்து பார்ப்பவருக்கு அவர் நிஜமான நாயைப் போலவே தோற்றமளிப்பார். சமூக வலைதளங்களில் பரவுவது போல அவர் எந்தவிதமான உடற்கூறு அறுவை சிகிச்சையையும் செய்துகொள்ளவில்லை.

மேலும் இதற்காக அவர் செலவழித்தது 220 கோடி ரூபாய் அல்ல. ஜப்பானிய நாணய மதிப்பில் சுமார் 20 லட்சம் யென் இந்திய மதிப்பில் சுமார் 11 முதல் 12 லட்சம் ரூபாய் மட்டுமே இதற்காகச் செலவிடப்பட்டுள்ளது. போலிச் செய்திகளும் மிகைப்படுத்தப்பட்ட புனைவுகளும் நிறைந்த இணைய உலகில், ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் நம்பக் கூடாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

“>