இந்தியாவை நோக்கி ஒரு மாபெரும் பொருளாதாரப் புயல் நெருங்கி வருவதாகவும், இது இதுவரை நாடு கண்டிராத அளவுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்துக் கடுமையான கவலைகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, இந்தியாவை நோக்கி ஒரு மாபெரும் பொருளாதாரப் புயல் இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது நம் நாட்டைத் தாக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது. நம் வாழ்நாளில் நீங்களோ, நானோ இதுவரை கண்டிராத அளவிலான ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடி வரவிருக்கிறது.

இந்த வரவிருக்கும் பொருளாதார அதிர்ச்சி அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்களையோ அல்லது பிரதமர் நரேந்திர மோடியையோ எந்த வகையிலும் பாதிக்காது. மாறாக, நாட்டின் அடித்தட்டு மக்களான இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு வணிகர்களைத்தான் இது கடுமையாகத் தாக்கும்.

மேலும், பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்குப் பெரிய தாக்கத்தை இந்தப் பொருளாதாரப் புயல் ஏற்படுத்தப் போகிறது என்றும், மிகக் கடினமான ஒரு காலகட்டத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்த ராகுல் காந்தி, “பொதுமக்கள் பாதிக்காத வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாகப் பிரதமர் மோடி, மற்றவர்களை வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்; ஆனால் அவரோ தொடர்ந்து உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருகிறார்” என்று சாடினார்.